சோதனையை வெல் | தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி கதை | தமிழ் நீதிக்கதை
சோதனையை வெல்
ஒரு ஊரில் சலவை வேலை செய்யும் ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு வயதான கழுதை இருந்தது. அது முதிர்ந்ததால் பொதி எடுத்துச் செல்ல சிரமப்பட்டு வந்தது. ஒருநாள், தொழிலாளி தன் கழுதையை அழைத்து சென்றுகொண்டிருந்தபோது, கழுதை வழியில் இருந்த பழைய கிணற்றுக்குள் விழுந்தது.
எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைக்க நினைத்திருந்த தொழிலாளி இது தான் நல்ல நேரம் என்று நினைத்தார். கிணற்றில் இருந்து மேலே தூக்காமல், கிணற்றை மண்ணால் மூடலாம் என்று அருகில் இருந்தவர்களை அழைத்தார். கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்தனர். அவர்கள் மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டி, அதை கிணற்றுக்குள் தள்ளினர்.
ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைப் பார்த்து கழுதை பயந்தது. பிறகு அது பழகிக்கொண்டது.தனக்குச் சம்பவிக்கிற துன்பத்தை நினைத்து வருந்திக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது என்று அது புரிந்தது. ஏதாவது செய்து அந்த நிலைமையிலிருந்து வெளியே வர வேண்டும் என்று அது எண்ணியது.தன் மீது விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியது. கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.
மேலே இருந்தவர்கள் மண்ணை வெட்டி போட்டுக் கொண்டிருந்தனர். தப்பிக்க வேண்டும் என்பதே முக்கியம் என்பதால், கழுதையும் வேகமாக மண்ணை உதறி மேலே ஏறி வந்தது.
தொழிலாளி கழுதையின் விடாமுயற்சியை பார்த்து ஆச்சரியப்பட்டான். அவனுக்கு இரக்கம் வந்தது. அவன் கழுதையை தன்னுடன் கூட்டிச் செல்ல முடிவு செய்தான்.
மனிதர்களுக்கு பல வகையான சோதனைகள் மற்றும் துன்பங்கள் நேரலாம். அவற்றை மட்டும் நினைத்து இருப்பதை தவிர்த்து, அவை அனைத்தையும் விட்டு விட்டு மீண்டும் எழ முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்
🌟 கதையின் கருத்து
“நமக்கு வரும் சோதனைகளை நினைத்து துவண்டு விட வேண்டாம். அவை நமக்கு முன்னேறுவதற்கான படிக்கட்டுகளாக அமையும்..”
💡 வாழ்க்கைப் பாடம்
வாழ்க்கையில் சோதனைகள் வருவது இயற்கை. ஆனால் அந்தச் சோதனைகளை பார்க்கும் போது பயந்து நிற்காமல், தன்னம்பிக்கையுடன் மற்றும் விடாமுயற்சியுடன் எதிர்கொண்டால் எந்தத் தடையையும் கடந்து வெற்றி பெற முடியும்.
சோதனைகள் நம்மை வீழ்த்துவதற்காக மட்டும் இல்லை. நம்மை உயர்த்துவதற்காகவும் இருக்கலாம்.
👉 இந்தக் கதையை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.






Comments
Post a Comment